Wednesday, November 21, 2012

‘ஆட்டோமேட்டிக் அயக்ரோ ரோபோ’ விவசாயி

     உழுது, விதைத்து, நீர் பாய்ச்சி, விதை குழிகளை மூடி என்று ஒரே நேரத்தில் நான்கு வேலைகளை செய்வதற்கு ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளனர் திருச்சி மூகாம்பிகை கல்லூரி மாணவர்கள்.

‘ஆட்டோமேட்டிக் அயக்ரோ ரோபோ’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரோபாவை உருவாக்கிய திருச்சி மூகாம்பிகை கல்லூரி எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் ரிச்சர்ட், விக்னேஷ்வரன், வினோத் அருண் ஆகியோரிடம் ‘புதிய தலைமுறை’ பேசியது:

எங்க ஃபைனல் இயர் புராஜக்ட்டுக்காகக் கண்டுபிடித்தது இது. வெறும் மார்க் வாங்கணும்னு இல்லாம, அன்றாட வாழ்வில் பயன்படுற மாதிரி எதாவது கண்டுபிடிக்கணும்னு நினைச்சோம். அப்போதான் விவசாயம் தொடர்பா பண்ணலாம்னு தோணுச்சு. புரோகிராமிங் பண்றது எங்க துறை சம்பந்தமா இருந்தாலும், இந்த ரோபோவோட பாகங்கள் எல்லாம் கடினமான உலோகங்களால செய்ய வேண்டியிருந்துச்சு. அதுக்காக வேறு துறை மாணவர்கள், பேராசிரியர்களின் உதவி தேவைப்பட்டுச்சு. அவர்களின் ஆலோசனையோடதான் இதை முழுமையா செயல்படுத்த முடிஞ்சுச்சு" என்கிறார் ரிச்சர்ட்.

ரிச்சர்ட்டைத் தொடர்ந்து இந்த ரோபோவைப் பற்றி விவரிக்கிறார் விக்னேஷ்வரன்: இந்த ரோபோவின் இயக்கத்தை, ‘மைக்ரோகண்ட்ரோலர்’ சிப் உதவியுடன் அமைத்துள்ளோம். பின்பக்கம் 2, முன்பக்கம் ஒன்று என்று மொத்தம் 3 சக்கரங்கள் உள்ளன. இதின் அடியில் ஒன்றன்பின் ஒன்றாகப் பொருத்தப்பட்டுள்ள 4 பாகங்கள் 4 தனித்தனி வேலைகளை செய்கின்றன. முதலில் உள்ள கடினமான தகடு நிலத்தை உழும். அதன்பின்னே விதை டேங்க் உள்ளது. உழுத நிலத்தில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு விதைகளைத் தெளித்துக்கொண்டே வரும் இந்த விதை டேங்க். அடுத்து அதன் பின்னே உள்ள நீர்க்குழாய் தண்ணீர் ஊற்றும். கடைசிப் பாகம், மண்ணை மூடிவிடும். இந்த நான்கு வேலைகளும் ஒரே சுற்றில் முடிந்துவிடும்.

பொதுவாக நிலங்கள் சதுர வடிவில் இருக்கும் என்பதால் இந்த ரோபோவின் இயக்கம் ‘சதுர அலை’ (Square Wave) வடிவில் நகரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்போது நிலத்தின் நீளம் எவ்வளவோ அதற்கு ஏற்ப, உதாரணமாக 10 அடி நீளம், 10 அடி அகலம் உள்ள சதுர நிலம் என்றால் அந்த 10 அடி நீளத்தை உழுவதற்கான நேரம் 10 நிமிடம் என்று முதலிலேயே, ‘டைமர்ல’ செட் செய்து வைத்துவிடலாம். 10 நிமிடம் முன்னோக்கி நகரும். 10 நிமிடம்  திரும்பிய திசையில் இவ்வாறு அதன் வேலைகள் தொடரும். இதில் நாம் பயன்படுத்தும் மோட்டாரைப் பொருத்து இதன் திறனை மேம்படுத்தலாம்" என்று விளக்கினார் விக்னேஷ்வரன். நிலத்தின் அளவு தேவைக்கு ஏற்ப ரோபோவின் செயல் திறனை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.    

இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறோம். விவசாயக் கருவிகளைத் தயாரிக்கும் கம்பெனிகள் இந்த ரோபோவை பெரிய அளவில் உற்பத்தி செய்து நடைமுறைப்படுத்த முன்வந்தால் தொழில்நுட்பத்தைத் தர தயாராகவே உள்ளோம். தொடர்ந்து அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம்" என்றார்.

விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காத இக்காலகட்டத்தில் விவசாய வேலைகளைச் செய்வதற்காக இந்த ரோபோ பெரிதும் பயன்படும்.

மேலும் விவரங்களுக்கு: 99528 31841, 91597 28428.             
  அ. நிவேதா